விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது யமஹா ஷோரூம். இங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் யமஹா பேசினோ வண்டியை பார்த்துவிட்டு அங்கு இருக்கும் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் பெண் அட்டெண்டரிடம் வண்டி நன்றாக ஓடுமா என கூறிவிட்டு வண்டியை ஓட்ட ட்ரெயல் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் அட்டெண்டர் ஆதார் கார்டு, இல்லை ஐடி புரூப் கேட்டுள்ளார், அதற்கு அவர் என்னிடமே அடையாளம் கேட்கிறீர்களா இருங்கள் யாருக்கு போன் செய்கிறேன் என கூறி போன் செய்வது போல் பாவலா செய்துள்ளார்.
இதில் பயந்து போன பெண், வண்டியை பின்னால் யாரையும் அமர்த்தாமல் வண்டியை கொடுத்து அனுப்பியுள்ளார். அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை வரை சென்று வருகிறேன் என்று கூறி சென்றவர் ஒரு மணி நேரம் ஆகியும் காணவில்லை. இதையடுத்து அப்பெண், தனது மேலாளரிடம் கூறிய பின்னர் சென்று பார்த்தபோது அந்த நபர் வண்டியுடன் தப்பி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து ஷோரூம் மேலாளர் விருதுநகர் பஜார் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் உத்தரவின் பேரில் போலீசார் ஷோரூமில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், அதில் இருப்பது திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், இசக்கி முத்து மகன் பொன் இசக்கி என்பது தெரியவந்தது. இவர் இதற்கு முன் சிவகாசியில் இதேபோல் இரண்டுமுறை வண்டியை திருடி சென்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் சென்று பொன்இசக்கி முத்துவை கைது செய்து வண்டியை பறிமுதல் செய்தனர்.