விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் சுமார் 1,700 ஹெக்டேரில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கிராமப் பகுதியில் மக்காச்சோளம் பயிர்கள் விதைப்பு பணி நடைபெற்று வருவதால் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆட்டோ மூலம் வேளாண் துறை அலுவலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, ராஜபாளையம் சுற்றுவட்டார கிராமப் பகுதி விவசாயிகளுக்கு மக்காச்சோளம் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அலுவலர்கள் செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர்.
மக்காச்சோள பயிர்களைப் பாதுகாக்க வேப்ப எண்ணெய் கரைசல், மெட்டாரைசியம் கரைசல் தெளித்தல், வரப்பு பயிர், ஊடுபயிர் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள், செயல் விளக்கம் ஆகியவை அளிக்கப்பட்டன. இதன் மூலம் படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களைக் காத்து நல்ல விளைச்சல் காணலாம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.