விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சதுரகிரி கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோயிலின் முக்கியத் திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், தற்போது ஆடி அமாவாசை திருவிழா நடைபெறாது எனவும்; பொதுமக்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என்றும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இன்று(ஜூலை 20) சதுரகிரி மலை அடிவரப் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோயில் திருவிழாக்கள் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு!