விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆண்டாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் அமமுக மாநில நிர்வாகி சந்தோஷ் குமார். இவர் தனது குடும்பத்தினருடன் பரமக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 85 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கிருஷ்ணன் கோவில் காவல் துறையினருக்கு அளித்த புகாரின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் நம்பி நாயுடு தெருவில் நெல் வியாபாரி முருகன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கொல்லத்திலிருந்து வந்த தனது மகளை அழைத்துவர மனைவியுடன் நேற்றிரவு 7 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டுச்சென்று இன்று அதிகாலை வீடு திருப்பினார்.
அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 49 பவுன் நகைகள், ரூ. 65 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடைபெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எஸ்பி அலுவலக அலுவலர் வீட்டில் இருந்து 48 சவரன் நகை கொள்ளை!