கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு 144 தடை விதித்துள்ளது. ஊரடங்கின்போது மக்களின் துயர் துடைக்க நியாய விலைக் கடைகளில் நிவாரணத் தொகையாக 1000 ரூபாய் மற்றும் அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருள் தொகுப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்க உத்தரவிட்டது. அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் அரசு விதித்த கட்டுப்பாடுகளின்படி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதனிடையே, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அமிர்பாளையம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் நிவாரண பொருட்களை வாங்குவதற்காக கடை திறக்கும் முன்பே பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்துக் கிடந்தனர்.
இதில் பலர் முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் வெயிலில் வாடி வதங்கினர். மக்களின் நிலையை கவனிக்கையில், அவர்களிடம் கரோனா வைரஸ் தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு தற்போதுவரை ஏற்படுத்தவில்லை என்பதே புலப்படுகிறது. எனவே, கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கரோனா வைரஸ் தொற்று பற்றி அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கை அகதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய காவல் துறை கண்காணிப்பாளர்!