விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது மூன்று பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி 10ஆம் தேதி பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கிலிருந்து விடுவித்து கொள்வதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதல் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரிமளா, நிர்மலா தேவிக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி மூவரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: