தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 8ஆம் தேதிமுதல் ஜூன் 6ஆம் தேதிவரை முழு ஊரடங்கிற்குப் பிறகு ஒரு சில தளர்வுகளுடன் 50 விழுக்காடு பணியாளர்களுடன் ஆலைகள் இயங்கலாம் என அரசு அறிவித்திருந்தது.
விருதுநகர் ஆமத்தூர் அருகே உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வுசெய்தார்.
அப்போது தொழிலாளர்களிடம் கரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலை உரிமையாளர்களிடம் தடுப்பு நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேட்டியளிக்கையில், தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சிறப்பு முகாம்களை ஏற்பாடுசெய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கைவைத்தார்.
மேலும் பேசிய மாணிக்கம் தாகூர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு கரோனா தடை காலத்தில் பட்டாசு ஆலைகளுக்கும் விலக்கு அளித்து செயல்படுத்த வேண்டும் எனவும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டத்தை பல மாநில அரசுகள் எதிர்த்தும் அந்தத் திட்டத்தை ஆதரித்து நடைமுறைப்படுத்துவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல எனக் குற்றஞ்சாட்டினார்.