விருதுநகர் : ரோசல்பட்டி ஊராட்சியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாசன் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் மாவட்டம் முழுவதிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் சிறந்த களப்பணியாளர்களாக செயல்பட்ட ஐந்து நபர்களுக்கும், அரசு வழங்கிய இலவச ஆடு, மாடுகளை கொட்டகை அமைத்து வளர்ப்பதில் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொண்ட சிறந்த ஐந்து பெண்களுக்கு பரிசினை விருதுநகர் எம்.எல்.ஏ சீனிவாசன் வழங்கினார். மேலும் ரோசல்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு சீருடையும் சிறப்புப்பரிசையும் வழங்கினார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ சீனிவாசன், ”அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது ஏனென்றால் அலுவலகங்களில் பெண் தங்கள் வேலையை சரியாக செய்வார்கள். ஆனால் ஆண்கள் ஓப்பி அடிப்பது, டீ மற்றும் சிகரெட் பிடிப்பதற்காக பாதி நேரம் வெளியில் சென்றுவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படியில்லை. அவர்களுக்கு கொடுத்த பணியை முழுமையாக முடிப்பார்கள்” எனப் பேசினார். இப்பேச்சு பொதுவெளியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும், நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ரோசல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.