விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள 159 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவான 185 வாக்குப்பெட்டிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் தியகராஜா மேல்நிலைப் பள்ளியில் இரண்டு அறைகளில் வைக்கப்பட்டு, தேர்தல் அலுவலர்கள் தலைமையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் கண்காணிப்பில் இரண்டு காவல் ஆய்வாளர்கள், நான்கு காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 70க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நான்கு அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் தீயைணைப்பு துறையினரும் துணை வட்டாட்சியர் இரண்டு பேரும் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையாளர் ஒரு நபரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறை வெளிப்புறங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணித்து வருகின்றனர். வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணபடுவதால் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ’வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.
இதையும் படிக்க: குடியிருப்புகள் புகுந்த காட்டு யானை- வீடு சேதம்!