விருதுநகர்: மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் நேற்று (ஏப்.15) 'முன்னேற விளையும் மாவட்டங்கள்' குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 'முன்னேற விளையும் மாவட்டங்களை மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, இந்தியாவில் 112 மாவட்டங்களை முன்னேற விளையும் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 2 மாவட்டங்கள் உள்ளன. அதில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று' என்றார்.
முன்னேற விளையும் மாவட்டங்களில் 3ஆவது இடத்தில் விருதுநகர்: இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவம், கல்வி, விவசாயம், குடிநீர் மத்திய அரசு வழங்கும் கடன் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசு முன்னேற விளையும் மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை அறிவித்தபோது இருந்த நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டம் வளர்ந்திருக்கிறது. மேலும், விருதுநகர் மாவட்டம் இந்தியாவில் உள்ள 112 முன்னேற விளையும் மாவட்டங்களில் 3ஆவது மாவட்டமாக உள்ளது.
மேலும், பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவில் காட்டன் இறங்குமதிக்கு 11% வரியை குறைத்துள்ள பிரதமருக்கு தமிழ்நாடு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரி குறைப்பின் மூலம் ஈரோடு, கோவை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் பயன்பெறும். மேலும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவித்து இருப்பது போல் முன்னேற விளையும் மாவட்டத்தைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக பின்தங்கிய வட்டாரமும் கண்டறியப்பட உள்ளது.
அதனைக்கண்டறிந்து வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற உள்ளது.
ஆளுநரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழ்நாடு கட்சிகள் புறக்கணித்ததைத் தவிர்த்து இருக்கலாம். கல்வியைப் பொதுப்பட்டியிலும் மாநிலப்பட்டியிலும் இல்லாமல் ரகசியமாக வைத்துள்ளது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதை அவர் தான் விளக்க வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயன்பெறும் தமிழ்நாடு: இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு தான் மத்திய அரசின் திட்டம் மூலம் அதிகம் பயன் பெற்ற மாநிலம் என்ற முக்கிய இடத்தைப்பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதுபோன்று மேலும், தமிழ்நாட்டின் எந்த திட்டத்திற்கு நிதி கேட்டாலும் அதனைக்கொடுப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் நலன்: மேலும் அவர், 'தமிழ்நாட்டில் தான் மத்திய அரசின் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து எல்லைத்தாண்டி மீன் பிடிப்பதால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டுக்கொண்டு வருகிறது. இந்திய எல்லைக்குள் கிடைக்கும் மீன் வளத்தை, அதிகரிக்க செய்ய மத்திய அரசு மீன் குஞ்சுகளை விடும் புதிய திட்டத்தை தொடங்கி மீன்வளத்தைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் பாதிக்காமல் இருக்க மத்திய அரசு மாதம் ரூ.1500 நிவாரணம் வழங்கி வருகிறது. அத்துடன் மீனவ சங்கங்கள் மீன்பிடி தடைக்காலத்தை மாற்றியமைக்க வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து வல்லுநர்களிடம் கருத்தைக் கேட்டு, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'கச்சத்தீவு உடன்படிக்கைக்குப் பின்புதான் இந்தியா, இலங்கை மீனவர்கள் நட்பில் பாதிப்பு!'