விருதுநகர்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தித் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் தனியார் ஹோட்டலில் நேற்று (ஜூன்.20) விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே ரவிச்சந்திரன் தலைமையில் ஒற்றை தலைமை குறித்து கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கட்சியின் நலனுக்காக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவது தெரிவிப்பது முடிவெடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ஆர். கே ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, "கிழக்கு மாவட்ட ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒருமித்த கருத்தாகக் கட்சியின் நலன் கருதியும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கட்சியில் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக எதிர்காலத்தில் கட்சி வலிமையோடும் பொலிவோடும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் ஒற்றை தலைமையை ஏற்பது என ஒருமித்த கருத்தோடு ஏக மனதாக முடிவு செய்துள்ளோம். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் ஆதரவு அளித்து வந்த நிலையில் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு - வைத்திலிங்கம் பேட்டி