தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அன்று முதலே டிஜிட்டல் பேனர் தொழில் சற்று மந்தமாகவே இருந்துவருதாக அந்த ஊழியர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியானார். இதன் காரணத்தால் அரசியல் கட்சியினர் இனி டிஜிட்டல் பேனர், விளம்பர பேனர்கள் வைக்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இந்த தொழிலை நம்பியுள்ள நேரடியாகவும் மறைமுகமாகவும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 150க்கும் மேற்பட்ட பேனர் அச்சிடும் உரிமையாளர்கள் இந்த தொழிலைச் செய்துவருகிறார்கள். அவர்கள் சார்பாக இன்று பல்வேறு பகுதிகளில் 'பேனர்களுக்கு கண்ணீர் அஞ்சலி' என போஸ்டர் அடித்தும், இதே பேனரை அவர்களின் கடை முன் கட்டியும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து பேனர் உரிமையாளர்கள் பேசுகையில், அனைத்து அரசியல் கட்சியினரும் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதே தொழிலை நம்பியுள்ள மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று வேலை இன்றி தவிப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், பேனர் தொழிலை நம்பி இருப்போரின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அனைத்து கட்சியினரும் டிஜிட்டல் பேனர் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: 'நீங்கள் பேனர் வைத்துதான் உங்களை வெளிப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை' - நடிகர் சூர்யா