விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,
கொரோனா தொற்றுக்கு முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு பேருந்துகளில் ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் மாணவ மாணவிகளிடம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பொதுமக்கள் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் வருகிற மார்ச் 31 வரை பொதுமக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிராமங்கள்தோறும் மக்கள் கைகளை கழுவும் முறை எப்படி என அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. கேரளாவிலிருந்து விருதுநகர் மாவட்டம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் 4 பேருந்துகள் ஒவ்வொரு முறை பயணம் முடிந்த பின்பும் முறையான மருத்துவ உபகரணங்களோடு சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பொதுமக்கள் அதிகம் கூட வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் ஆலோசனை வழங்கியுள்ளன. அதனடிப்படையில் 100 பேருக்கு மேல் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிகழ்ச்சியை நடத்துபவர்களே மருத்துவ குழு மூலம் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கிருமி தொற்று இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க :பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட காவலர் கைது