விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வருகிற திங்கட்கிழமையிலிருந்து அனைத்து வணிக நிறுவனங்களையும் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே செயல்படுத்த விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கத் தலைவர் வி.வி.எஸ். யோகன் அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "நமது நகரில் தற்சமயம் நோய்த் தொற்று அதிகமாகப் பரவிவருகிறது. வணிகர்களாக நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதோடு, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகச் செயல்படுவதற்கு வழிசெய்ய வேண்டும்.
அதற்காக நகரில் உள்ள அனைத்துத் தரப்புப் பொருள்கள் விற்பனை செய்யும் வணிகர்கள் அனைவரும் வருகிற திங்கட்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்களைச் செயல்படுத்த வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
மேலும், கடைகளில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். பலசரக்கு கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக் செல்போன் கடை என நகரில் உள்ள அனைத்துக் கடைகளும் இவற்றைப் பின்பற்ற வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.