”ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ரசாயனம் கலந்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால் மாட்டுச்சாணத்தில் இருந்து சிலை செய்ய வேண்டும் என நினைத்தேன். தற்போது மாட்டுச் சாணத்துடன் மர விதைகளை கலந்து சிறிய அளவிலான சிலைகளை தயாரித்துவருகிறேன். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் அதனை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படாது. அதில் உள்ள விதையில் இருந்து ஏதாவது செடியும் முளைக்கும்" என்ற சங்கரின் பேச்சில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தத்துவம் ஒழிந்திருந்தது. விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சங்கர்.
நாடு முழுவதும் செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு வடிவங்களில் ஆங்காங்கே ஏராளமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுவருகின்றன. பெரும்பாலும் ரசாயன கலவை பூசப்பட்ட சிலைகளை வழிபாட்டிற்கு பயன்படுத்தி பின்னர் நீர்நிலைகளில் கரைப்பதையே நாம் வழக்கத்தில் கொண்டுள்ளோம்.
அதே நேரத்தில் இறைவனை கொண்டாடும் ஆர்வத்திற்கு முன் இயற்கையின் மீதான அக்கறையை நாம் இழந்துவிடுகிறோம். ரசாயனம் பூசிய சிலையை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகளும் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதை கவனத்தில்கொண்ட சங்கர் மாட்டுச் சாணத்தால் விநாயகர் சிலைகள் செய்து வருகிறார்.
இந்த ஆண்டு மக்களிடம் கிடைக்கும் ஆதரவை பொறுத்து வரும் ஆண்டுகளில் இதைவிட பெரிய சிலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவி்க்கிறார்.