விருதுநகர்: ராஜபாளையம் நகர், கிராமப் பகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 17ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், "தேமுதிக வளரக்கூடாது என சில கட்சிகள் நினைக்கின்றன; அதை முறியடிப்போம். தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது.
தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எல்லா இடங்களிலும் தேமுதிக 2000, 3000 ஓட்டுகள் வாங்கியுள்ளது. இது தேமுதிகவின் ஓட்டு அல்ல. இது கடைசி நேரத்தில் துரோகத்தால் செய்யப்பட்ட சதி.
'அஞ்சுக்கும் பத்துக்கும் அலைகின்ற கட்சியல்ல தேமுதிக'
அதிமுக நடந்து முடிந்த தேர்தலில் 60 இடங்களில் ஆயிரம் ஓட்டு, 3000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இப்பொழுது தேமுதிகவின் பலம் என்ன என்று புரிந்திருக்கும். மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, நீங்கள் கொடுங்கள். அதேபோல் தேமுதிகவிற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நீங்கள் கொடுங்கள்.
நீங்கள் கொடுக்கின்ற அஞ்சுக்கும் பத்துக்கும் அலைகின்ற கட்சியல்ல தேமுதிக. தேமுதிகவில் உழைப்பதற்காகத்தான் விஜயகாந்த் இரண்டு ஆண் பிள்ளைகளைப் பெற்றுள்ளார். ஆகையால், நாங்கள் உங்களுடன் சேர்ந்து கட்சிக்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் எங்கள் மீது அன்பு வைத்து தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும்.
'லெஃப்ட் & ரைட் வாங்கிடுவேன்'
அடுத்து நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் புலி பதுங்கி, பாய்வதுபோல் இருக்க வேண்டும். ஆகையால், அடுத்து நாம் எடுத்துவைக்கும் அடி, தமிழ்நாட்டில் தேமுதிக எவ்வளவு பெரிய கட்சி என்பதை நிரூபிக்க உதவும்.
விஜயகாந்த் நல்ல உடல் நிலையுடன் ஆரோக்கியமாக இருக்கிறார். என் தாய் பிரேமலதா சிங்கப்பெண். என் தந்தையை நல்லபடியாகப் பார்த்துக் கொள்கிறார். அவரைத் தவறாகப் பேசினால் லெஃப்ட் & ரைட் வாங்கிவிடுவேன்" என்றார்.
இதையும் படிங்க:ஆர்யன் கான் பிணை மனு இன்று விசாரணை!