விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் வத்திராயிருப்பைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ். வேட்புமனு தாக்கல்செய்து இரண்டு நாள்கள் மட்டுமே பரப்புரை மேற்கொண்ட இவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கரோனா அறிகுறியுடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 7.55 மணி அளவில் மாதவராவ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இவரது உடல் சொந்த ஊரான காதிபோர்டு காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று அவரது உடல் அடக்கம்செய்யப்படவுள்ள நிலையில், அவரது உடலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, அமமுக வேட்பாளர் சங்கீதப் பிரியா உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் மாதவராவ் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.