விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் ஏ.ஆர்.ஆர் ரகுராமனுக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்தியா முழுவதும் வேலைக்கு எடுப்பதற்கு ஒரே பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு மோசமான சட்டம் குறித்து பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வேலைக்கு வர வேண்டும் என்றாலும் டெல்லியில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மோசமான திட்டத்தை அறிவித்திருக்கிறார். 90 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஐந்து கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருக்கிறது. நீட் தேர்வு காரணமாக மருத்துவராக முடியாமல் சுமார் 13 பேர் உயிரிழந்தனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும் போராடக்கூடிய விவசாயிகளைப் பற்றி பிரதமர் மோடி கவலைப்பட்டாரா? அம்பானி, அதானி, அணில் அகர்வால் போன்ற கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்காகதான் அவர் ஆட்சி நடத்துகின்றார். ஏழை எளிய விவசாயிகளுக்காக ஆட்சி நடத்தவில்லை. யாரும் விரல் நீட்டி வைகோ தவறு செய்தார் என்று சொல்ல முடியுமா?" என ஆவேசமாகப் பேசினார்.