விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் கடந்த வெள்ளிக்கிழமை (அக். 8) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், அருண்குமார் என்ற இரண்டு இளைஞர்கள் பட்டாக்கத்தி வைத்திருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்பேரில் கூமாப்பட்டி காவல் துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைதுசெய்தனர்.
உணவகத்திலிருந்து ஓட்டம்
பின்பு, இருவரையும் நேற்று முன்தினம் (அக். 9) இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்திவிட்டு, பின்பு அருப்புக்கோட்டை சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறைக்குச் செல்லும் வழியில் காவல் துறையினர் இருவருக்கும் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர்.
உணவுக்குப் பின்பு அழைத்துச் செல்ல புறப்படும்போது, இரண்டு கைதிகளும் தப்பியோடியுள்ளனர். காவல் துறையினர் தற்போது இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர். இரண்டு கைதிகள் தப்பியோடிய சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓசியில் சரக்கு தராத டாஸ்மாக் விற்பனையாளரின் முகத்தை வெட்டிய மதுப்போதை ஆசாமிகள்