இந்த புதிய திட்டம் குறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி அளித்த பேட்டியில், " இந்தத் திட்டம் மூலம் குப்பைகளைக் கொட்டி வைக்கும் சூழல் மாறி வருகிறது. வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று குப்பைகளை பெற்று, மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும் பிரித்து வருகின்றனர். குப்பை இல்லாத, குப்பைத்தொட்டி இல்லாத நகராட்சியாக விருதுநகரை மாற்றி வருகிறோம்", என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " 23 இடங்களுக்கு மேலாக இம்மாதிரியான திடக்கழிவு மேலாண்மை அமல்படுத்தப்பட்டுள்ளது. கால்வாய்களில் இருக்கும் குப்பை கழிவுகளை நீக்குவதற்காக ஆறு பிரத்தியேக குழுக்களை அமைத்துள்ளோம். இதற்கு முன்பாக குப்பை கொட்டப்பட்ட இடங்களில் கோலங்கள் போடுதல், பூச்செடிகள் வளர்த்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் அந்த இடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் மன நிலையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு, விருதுநகர் நகராட்சி குப்பை இல்லா நகராட்சியாக மாறும் என நம்புகிறேன் ", தெரிவித்தார்.