விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடங்கியது. அப்பொழுது, கடந்த 2018-19ஆம் ஆண்டு தரணி சர்க்கரை ஆலை சுமார் 2,000 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.14 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜா, தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் முன் தரையில் அமர்ந்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர்கள், "கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கப்படாததால் நாங்கள், கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடனைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் வட்டிச் சலுகையையும் பெற முடியவில்லை.
அதோடு கடனைச் செலுத்தாததால் வங்கியிலிருந்து விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், பணம் கொடுக்காத சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, உடனடியாக பாதிக்கப்பட்ட சுமார் இரண்டாயிரம் விவசாயிகளுக்கும் கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே பெற்றுத் தர வேண்டும்" என வலியுறுத்தினர். விவசாயிகளின் திடீர் அரை நிர்வாணப்போராட்டத்தால் குறைதீர் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தப் பின், விவசாயிகள் தங்களது இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்தனர். இதன்பின்பு குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதையும் படிங்க: 'கரும்பு விலை கசக்குது, எரிசாராயம் விலை இனிக்குது' - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்