விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் பஞ்சாயத்து சார்பாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க அந்த ஊரில் பல பகுதிகளில் பணி நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரின் வீட்டிற்கு அருகே 6 அடி அளவு கொண்ட மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க கிராம பஞ்சாயத்து சார்பாக குழி தோண்டப்பட்டுள்ளது.
அப்போது அந்தப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அந்தக் குழியில் மழை நீர் நிரம்பி உள்ளது. மணிகண்டன் வீட்டிற்கு வந்திருந்த அவருடைய மூன்று வயது பேரன் ருத்ரன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மழை நீர் சேகரிப்புத் தொட்டிக்குத் தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
குழந்தையின் இறப்புக்கு காரணமான அந்தக் குழியை பாதுகாப்பாற்ற முறையில் விட்டுச்சென்ற ஒப்பந்ததாரர் மீதும், அரசு ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயிரிழந்த ருத்ரனின் தந்தை திருமூர்த்தி அவரது குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: மூன்று வயது குழந்தையின் உயிரைப் பறித்த ’மாஞ்சா நூல்’ - தொடரும் சோகம்