விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு கல்லூரி மாணவி, 7 மாத கர்ப்பிணி உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
25 பேர் படுகாயங்களுடன் சாத்தூர், சிவகாசி, மதுரை, தூத்துக்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் விஜய கரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல், ஜெயராமு, ராஜா, வேல்ராஜ், பொண்ணுபாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்தநிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி உள்குத்தகைதாரரான பொண்ணுபாண்டியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று (பிப்.17) பிரதான குத்தகைதாரரான சக்திவேல், அவருடைய மனைவி ஜெயராமு (33) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடி விபத்து: பிரதான குத்தகைதாரர் ஏழாயிரம்பண்ணையில் கைது!