விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபின் அவரது குடும்பத்தாருக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "எனது நெருங்கிய நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமாகியது வேதனை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
கரோனா என்ற கொடிய நோய் வேகமாகப் பரவிவருகிறது. பொதுமக்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் எவையாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்ற தகவல் பரவுகிறது. அனைவரும் தடுப்பூசி கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு கரோனா தடுப்பூசி மருந்து கிடைக்க ஆவன செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை தாக்கும் அளவிற்கு மிக மோசமான நிலையில் பாஜக தேர்தலை அணுகுகிறது.
கொள்கை அரசியலை அணுகத் திராணியில்லாமல் தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது அல்லது குண்டர்களை ஏவித் தாக்குதல் நடத்தி அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் பாஜக இந்தியா முழுவதும் தேர்தல் நேரங்களில் ஈடுபட்டுவருகிறது.
மம்தா பானர்ஜி பரப்புரைக்குத் தேர்தல் ஆணையம் தடைவிதித்திருப்பதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதில், ஏதேனும் தில்லுமுல்லு நடக்குமோ என்ற அச்சம் மக்களிடத்தில் உள்ளது. வாக்கு இயந்திரங்களைக் கடத்திச் செல்லக்கூடிய அளவிற்கு ஆளுங்கட்சி தரப்பினர் தமிழ்நாட்டில் செயல்படுகிறார்கள் என்பதை அறிகிறோம்.
தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அரக்கோணம் இரட்டை கொலை என்பது மது போதையின் காரணமாக ஏற்பட்ட கொலை அல்ல அது அப்பட்டமான சாதி படுகொலை. அரசியல் பகையின் விளைவாக ஏற்பட்ட படுகொலை. தலைவர்களின் சிலை தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவது பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் தரம் தாழ்ந்த அரசியல்.
இதுபோன்ற செயல் மிகவும் கேவலமானது. தமிழ்நாட்டில், எப்படியாவது மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என நினைக்கிறார்கள். இந்தத் தேர்தல் அவர்களுக்குச் சரியான பாடம் புகட்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வெற்றிபெறுவது உறுதி. அவர் வெற்றிபெற்ற பின் இங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் தகுதியுடைய மாதவராவின் மகள் திவ்யாவிற்குக் காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: வரம்புகளைக் கடந்து ஆதரவளித்தோருக்கு நன்றி- திருமாவளவன்