விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேருந்து நிலையம் அருகே 3 கோடியே 30 லடசம் ரூபாய் செலவில் சுமார் 12000 சதுர அடி பரப்பளவில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, அப்பகுதியைச் சுற்றி மரம் நடும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, அமைச்சரை சூழ்ந்து கொண்ட ஒரு பிரிவினர், புதிதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கோயில் கட்டி வந்ததாகவும், அரசு அலுவலர்கள் அதனை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், 20 சென்ட் நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.
அமைச்சரை முற்றுகையிட்ட பிரிவினர் இந்த நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இரு தரப்பு நியாயங்களையும் கேட்டறிந்த அமைச்சர், மரம் நடும் விழாவில் கலந்துகொள்ளாமல் அதனை புறக்கணித்து, திடீரென புறப்பட்டுச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத வட்டாட்சியர் தானே மரக்கன்றுகளை நட்டு அப்பகுதியில் இருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க: 'தமிழைச் சரியாகப் பேசுங்கள் முதலமைச்சரே' - பொன்முடி தாக்கு