விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பின்னர், மனைவி கனகா, மகன் நிரஞ்சன் குமார் ஆகிய இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
கனகா தனது வீட்டின் அருகில் உள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
தந்தை மறைவுக்கு பின்னர் நிரஞ்சன் தன்னைப் பார்க்க வரும் உறவினர்கள் செலவுக்காக கொடுக்கும் ரூ100, 200, எனக் கொடுக்கும் பணத்தை சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தொற்று அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் கரோனா நிதி கொடுக்க முன்வர வேண்டி தொலைக்காட்சி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை அறிந்த நிரஞ்சன், தான் சைக்கிள் வாங்க வேண்டும் என வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை ராஜபாளையம் வட்டாட்சியர் ரெங்கநாதனிடம், முதலமைச்சர் நிதிக்காக வழங்கினார். அதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர், நிரஞ்சனை பாராட்டினார்.
இதுகுறித்து, சிறுவன் கூறும்போது, "கரோனா பதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், முதலமைச்சர் நிதி கேட்டுள்ளார். என்னால் முடிந்த ஆயிரம் ரூபாய் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளேன். இதே போல் அனைவரும் தங்களால் ஆன நிதியைத் தமிழ்நாடு அரசுக்கு வழங்க முன்வர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தினசரி கரோனா பாதிப்பு 33 ஆயிரத்தைத் தாண்டியது: சென்னையில் 3ஆவது நாளாகப் பாதிப்பு குறைவு