விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கரடி, மான், சிறுத்தை, யானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறண்ட சூழ்நிலை நிலவுவதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் மலை அடிவாரப் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் வருகின்றன.
இந்நிலையில், மகாராஜபுரம் கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த கரடி ஒன்று, காலை வரை காட்டுக்குள் செல்லாமல் முள்வேலிக்குள் படுத்துக்கொண்டது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினரும், காவல் துறையினரும் கரடியைப் பிடிக்க சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாகப் போராடினர்.
ஒருவழியாக கரடியைப் பிடித்த வனத்துறையினர் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். ஊருக்குள் கரடி புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வனத் துறையினரின் ஜீப்பை விரட்டி முட்டித்தள்ளிய காட்டுயானை!