விருதுநகர்: பரியேறும் பெருமாள் படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். கிராமத்து பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் கதாநாயகன் பரியனின் அருகில் அவ்வூர் பெரியவர் ஒருவர் வந்து உட்காருவார்.
பரியனிடம் பேச்சு கொடுக்கும் பெரியவர், அவன் எங்கே குடியிருக்கிறான் என விசாரிப்பார். தான் குடியிருக்கும் இடத்தைப் பற்றி பரியன் கூறியதும், அடுத்த நொடியே எழுந்து, ஓடும் பேருந்திலிருந்து இறங்கி விடுவார் பெரியவர்.
கிராமக் குடியிருப்புகள் அங்கு வசிக்கும் மக்களை வைத்தே அடையாளப்படுத்தப்படுகிறன என்பதை அழுத்தமாய் இந்த காட்சியில் விளக்கப்பட்டிருக்கும்.
தமிழில் விளங்கி வரும் பெயர்களில் பெரும்பாலானவை காரணப் பெயர்களாகவே இருக்கின்றன. இந்த விதி தெருக்களின் பெயர்களுக்கும் பொருந்தும்.
மேய்ச்சல் நிலம் அதிகம் கொண்ட ஊர்கள் பட்டி என வழங்கப்பட்டன. தொழில்களால் சிறப்புற்று விளங்கும் பகுதிகள் பேட்டை எனப்பட்டன. இன்றும் சிப்காட் அமைவிடங்கள் பேட்டை என்றழைக்கும் வழக்கமே உள்ளது.
ஊரும் பேரும்
தமிழ்நாட்டின் இருக்கும் ஊர் பெயர்களின் சுவாரஸ்யமான காரணங்களை ஆராய்ந்த தமிழறிஞர் ரா.பி சேதுபிள்ளை, ஊரும் பேரும் என்ற நூலில் அதனை விளக்கி இருப்பார்.
வேத விற்பனர்கள் வாழ்ந்த பகுதி வல்லபமங்கலம் என்றழைக்கப்பட்டன. குடியிருக்கும் பகுதி என்ற பொருளில் வழங்கி வந்த சேரி என்னும் சொல், பின்னாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியை குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டன.
எப்போதும் மத்திய நீரோட்டத்துடன் இணக்கமாகவே இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் தமிழ்நாட்டின் குடியிருப்புகள் மற்றும் வீதிகளுக்கு தேசியத் தலைவர்களின் பெயர்களை வைக்கும் வழக்கமும் இங்கு இருந்து வருகிறது. திராவிடக் கட்சிகள் தங்களின் தமிழ்பற்றை வெளிப்படுத்தும் வகையில் தெருக்களுக்கு தனித்தமிழ் பெயர்களைச் சூட்டியிருக்கின்றன.
கிராமங்களில் தெருக்களுக்களுக்கெனத் தனிப் பெயர்கள் இருந்தாலும், பெரும்பாலும் அவைகள் அமைந்திருக்கும் திசைகளை வைத்து மேலத் தெரு, கீழத்தெரு என்றே அடையாளப்படுத்தப்படும் வழக்கமும் உண்டு. கிராம பஞ்சாயத்துக்களின் விரிவாக்கமாக உருவாக்கப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு, அங்கு வசிக்கும் மக்களை அடையாளப்படுத்தும் விதமாக பெயர்கள் வைக்கப்படும்.
தனித்திருக்கும் ஆத்திப்பட்டி
தெருக்களுக்கு பெயர் வைக்கும் நீண்ட இந்த வரலாற்றிலிருந்து மாறியிருக்கிறது விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி ஊராட்சி.
கட்டகஞ்சம்பட்டி, லட்சுமி நகர், நாராயணபுரம், ஜெயராம் நகர், என்.ஜி.ஓ காலனி பகுதிகளை உள்ளடக்கியது ஆத்திப்பட்டி ஊராட்சி. அருப்புக்கோட்டை நரகத்தின் விரிவாக்கப் பகுதிகளும் இந்த ஊராட்சியின் எல்லைக்குள்ளேயே வருகின்றன.
விரிவாக்கப்பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளை உறவினர்களுக்கு அடையாளம் கூறுவதிலும், எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு வருபவர்களுக்கு தெருக்களை அடையாளம் காட்டுவதிலும் சிரமம் இருப்பதாக ஊராட்சி நிர்வாகத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மக்களின் இந்த வருத்தத்தை போக்கும் வகையில், விரிவாக்கப்பகுதியில் இருக்கும் 105 தெருக்களுக்கு தமிழ் பெயர்கள் சூட்டியிருக்கிறது ஊராட்சி நிர்வாகம். புதிய பெயர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில், தெருக்களுக்கு வார நாட்கள், நதிகள், பூக்கள், தமிழ் மாதங்களின் பெயர்களைச் சூட்டியிருக்கிறன்றனர்.
தெருக்களுக்கு தமிழ் பெயர்கள்
"எங்கள் ஊராட்சியில் உள்ள புதிய குடியிருப்பு பகுதியில இருக்கிற தெருக்களுக்கு தமிழ் மாதங்கள், நதிகள், பூக்கள், வார நாட்களோட பெயர்களை வைச்சிருக்கோம்" என தங்களின் புதிய முயற்சி குறித்து விளக்குகிறார் ஆத்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி.
பெயர் வைப்பதோடு மட்டும் நிற்காமல் தெருக்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் புதிய பெயர்களை இணைய வரைபடத்திலும் பதிவேற்றியிருக்கிறார்கள் ஆத்திப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர்.
"புதிய தெருப்பெயர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப அப்பகுதியின் இயல்பை விளக்கும் வகையில் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. அதோடு புதிய தெருக்களின் பெயர்களை கூகுள் வரைபடத்திலும் பதிவேற்றியிருக்கிறோம். இதனால ஊருக்கு புதுசா வர்வங்களும் செல்போன் மூலமா ஈஸியா வழியை தெரிஞ்சுக்கலாம்" எனத் தங்கள் ஊராட்சியின் ஹைடெக் முயற்சியை விவரிக்கிறார் ஆத்திப்பட்டியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், ராஜேஷ்வரியின் கணவருமான வாசுதேவன்.
விரிவாக்கப்பகுதிக்கு அடையாளப் பெயர் வைக்காமல், ஆத்திப்பட்டி ஊராட்சி எடுத்திருக்கும் புதிய முன்னெடுப்பை தமிழ்நாட்டின் மற்ற விரிவாக்கப்பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தினால், காலங்காலமாக ஊர்களின் பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தும் நிலை மாற்றம் அடையும்.
இதையும் படிங்க: அரசு உதவினால் உலக சாதனை படைப்பேன்: பொறியியல் மாணவரின் நம்பிக்கை!