உலகமெங்கும் காதலர்கள் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். தமிழ்நாட்டை பொருத்தவரை காதலர் தினத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு பள்ளிகள், முக்கியச் சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்களில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் காலமெல்லாம் காதல் வாழ்க, ஆதலினால் காதல் செய்வீர், உலக காதலர் தின வாழ்த்துக்கள் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், சாதி, மதம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கை இல்லாத அன்பும், அறிவும் ஆட்சி செய்கிற பொறுப்புமிக்க சமத்துவம் மிக்க காதலை ஆதரிப்போம், வரவேற்போம் எனவும் போஸ்டரில் எழுதப்பட்டிருந்தது. பள்ளி அருகே இந்திய மாணவர் சங்கம் ஒட்டியுள்ள இப்போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் காதலர் தினத்தன்று சித்தன்னவாசலில் காதலர்கள் முகாமிட்டு ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதும், மலையின் உச்சியில் ஆர்வ மிகுதியால் ஆபத்தாக பல்வேறு கோணங்களில் செல்பி எடுப்பதும், சிலர் அநாகரீக செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. குறிப்பாக சிலர் சித்தன்னவாசல் பூங்கா, செடி கொடிகள் நிரம்பிய பகுதிகளில் அமர்ந்து அநாகரீக செயலில் ஈடுபடுகின்றனர். இச்செயல் அவ்வழியாக செல்லும் மற்ற சுற்றுலாப் பயணிகளை முகம் சுழிக்க வைக்கின்றது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: காதலர் தினக் கொண்டாட்டம் - சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள்!