விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கர்ப்பிணி உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பணீந்திர ரெட்டி கூறியதாவது, "சாத்தூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள இழப்பீடு உடனே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பட்டாசு விபத்து ஏற்படுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதனால் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுவருகிறது. விபத்துகளைத் தடுக்க அனைத்துப் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாய பயிற்சி வழங்க வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையிடம் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
கோடைகாலம், பண்டிகை காலங்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைத்து ஆய்வுகள் நடத்த வேண்டும்.
வெடி விபத்து ஏற்பட்ட ஆலை மீது எந்தவிதப் புகாரும் வரவில்லை. இந்த ஆலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு