விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு - ஆசிலாபுரம் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு பொதுஊரடங்கு காலம் புதிதான அனுபவத்தைத் தந்துள்ளது. வீட்டிலேயே செல்போனில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளை மீட்டெடுக்கும் விதமாக ஆசிலாபுரம் ஊராட்சித் தலைவர் வேல்முருகன் தமிழரின் மரபுக் கலைகளை கற்றுக்கொடுக்க முயற்சித்துள்ளார்.
அதன்படி சிலம்பம் நன்கு கற்று தேர்ந்த சூர்யா, மனோஜ் ஆகிய இருவரின் உதவியோடு மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி வகுப்பில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்று வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம், சுருள்வாள், தீப்பந்த சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
காலையில் ஆண்களுக்கு ஒரு மணி நேரமும், அதன்பின் பெண்களுக்கு ஒரு மணி நேரமும் என இரு பிரிவாக கற்று கொடுக்கப்படுகிறது. இங்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆண்களுக்கு இணையாக பெண்களும் இரு கைகளிலும் சிலம்பம் சுற்றி வியக்க வைத்தனர்.
இந்த சிலம்பம் பயிற்சிப் பள்ளிகளில் இருப்பதுடன் மட்டுமில்லாமல், கல்லூரியிலும் கற்று விளையாடுவதற்கு அரசு வழிவகை செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி படத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டனம்