விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமி தானியங்கி ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை மருத்துவமனைக்கு கொடையாக வழங்கினார்.
நாடு முழுக்க கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களும் தாராளமாக நிதி அளித்து வரும் சூழ்நிலையில் பள்ளி மாணவர்களும் தங்கள் சேமிப்பினை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காமராஜ்-முத்துலட்சுமி தம்பதியின் மகளான ஆறாம் வகுப்பு மாணவி மகாலட்சுமி தனது 11ஆவது பிறந்தநாளை நேற்று(மே21) கொண்டாடினார். அப்போது தொலைக்காட்சிகளில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பள்ளி மாணவ- மாணவிகள் பல்வேறு வகையில் நிதி அளித்து வருவதை கண்ட மாணவி மகாலட்சுமி, தன் பெற்றோரிடம் தானும் இதுபோல் ஏதாவது செய்யவேண்டும் என்று கூறி ஆக்ஸிஜன் தேவையில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என வலியுத்தியுள்ளார்.
இதை ஏற்ற அவரின் பெற்றோரும், ரூ.88 ஆயிரம் மதிப்பிலான நவீன தானியங்கி ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "இந்த தானியங்கி ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி, வழக்கமான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்துவதை விட இது மிகவும் பாதுகாப்பானது, இயற்கையாக உள்ள காற்றிலிருந்து ஆக்ஸிஜனை மட்டும் இக்கருவி பிரித்து கொடுப்பதால் நோயாளிகள் நல்ல பயன் பெறுவர். தற்போது உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற கருவிகள் தான் அதிகம் தேவை: எனத் தெரிவித்தனர். தனது பிறந்த நாளை முன்னிட்டு தேவையறிந்து உதவும் உள்ளம் கொண்ட மாணவி மகாலட்சுமியை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.