விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் - கீதா தம்பதியின் மகள் லட்சுமி பிரியா. அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நாசா முன்னாள் விண்வெளி வீரர் டான்தாமஸ் தன்னுடைய பள்ளி நிகழ்ச்சிக்கு வந்தபோது விண்வெளி துறையில் சாதிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பின்பு முன்னாள் விண்வெளி வீரரின் வழிகாட்டுதலின் பேரில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோ4குரு நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் சிறந்த போட்டியாளர் என்ற விருதை பெற்றார். இதனால் வருகிற மே மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா மையத்திற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
இந்த பயணத்திற்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதால் மாணவியின் குடும்பத்தினர் போதிய நிதி இல்லாமல் கவலையடைந்துள்ளனர். இம்மாணவிக்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நிதி உதவி வழங்கி உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.