விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெரிய பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தின் செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த புரட்டாசி மாதம் 13ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து பெரியபெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு வேதங்கள் முழங்ககொடி ஏற்றினார். தினமும் பெரிய பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக செப்புத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. பெரிய பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோருடன் தேரில் எழுந்தருளினர். இந்த தேரோட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்று கோஷங்கள் எழுப்பியபடியே, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேர் 4 ரத வீதி வழியாக வந்து பின்னர் மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நகர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆயுத பூஜை வழிபாடு - குவிந்த பக்தர்கள்!