விருதுநகர்: விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி எஸ்.பி., முத்தரசி தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.
கூட்டுப்பாலியல் வன்கொடுமை: அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள் வீடுகளிலும் சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் 7 நாள்கள் அனுமதி கேட்டு நேற்று (மார்ச் 28) மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிபிசிஐடி காவலில் விசாரிக்க உத்தரவு: இந்த நிலையில் சிபிசிஐடி மனு தாக்கல் மீதான விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், ஜூனத் அஹமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு இன்று (மார்ச் 29) அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் 6 நாள்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற மாணவர் கைது