விருதுநகர்: பரபரப்பாக நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாதவராவ் (63) போட்டியிடுவார் என கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
பரப்புரையில் ஈடுபட்ட 2 நாட்களில் உடல்நலக்குறைவு
இதையடுத்து, வேட்புமனு தாக்கல், பரிசீலனை அனைத்தும் முடிவடைந்து இரண்டு நாள்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மாதவராவ், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு பரப்புரைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவரது மகள் திவ்யா மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டார். ஆனால், தொடர்ந்து அவரது உடல்நலம் பாதிக்கப்படவே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு
பின்னர், கரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பெற்று வந்த சமயத்தில் அவருக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 7.55 மணியளவில் எதிர்பாராத விதமாக சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இறுதிச் சடங்கு
இத்தகவலை மாதவராவின் உறவினர்கள் உறுதி செய்தனர். மாதவராவின் இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறுமா அல்லது ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெறுமா என்பது பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கையை தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது அக்கட்சியினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸில் பயணம்
1990ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் செயலாளராக இருந்த மாதவராவ், பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆலோசகராக, சட்டப்பிரிவின் துணை செயலராக, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.