விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பரிவட்டம் போன்றவை மதுரை கள்ளழகருக்கு சாற்றுவதற்கு எடுத்துச்செல்லப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்போது ஆற்றில் இறங்கும் கள்ளழகர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் இவைகளை உடுத்திக்கொண்டே வைகை ஆற்றில் இறங்குவார்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மதுரை அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில் வளாகத்திலேயே நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, கோயில் வளாகத்திலேயே வைத்து ஆண்டாளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மதுரைக்கு ஆண்டாள் சூடிக்களைந்த மாலை உள்ளிட்ட பொரு்ளகள் பிரகாரம் வழியாக சுற்றி எடுத்து வரப்பட்டு கார் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர். தற்போது கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி இல்லை என்பதால் கோயில் ஊழியர்கள் சிலரே இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்களின் குரலைப் பேசி கோவை இளைஞர் சாதனை!