விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எட்டூர் வட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 120க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களும் வேலை செய்து வருகின்றனர்.
சுங்கச் சாவடி மையத்தில் படந்தாலை சேர்ந்த விஜயன் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயன் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
முதற்கட்டமாக வந்த மருத்துவ அறிக்கையில் ஐந்து பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்னும் சிலருக்கு மருத்துவ அறிக்கை வராத நிலையில், பலருக்கு தொற்று இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இங்கு பணிபுரியும் பல ஊழியர்கள் உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் அறிகுறிகளுடன் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், நிர்வாகம் தங்களுக்கு விடுப்பு அளிக்க மறுக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் இந்த சுங்கச் சாவடி மையத்தின் வழியே அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவ்விடத்தில் கிருமி நாசினி தெளித்து இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரிசோதனையில் ஊழியர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும், இந்த சுங்கச் சாவடி மையத்தில் இதுவரை எந்த ஒரு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. உடல்நிலை சரியில்லாத ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருவதால் மேலும் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதோடு, உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வழிவகை செய்யும் என ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே சுங்கச் சாவடி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை நிர்வாகம் ஆகியவை விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து கரோனா தொற்று பரவலை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: நாரதா ஊழல் வழக்கு: திரிணாமுல் காங்., 2 அமைச்சர்கள் உள்பட நால்வர் கைது!