புதிய புத்தகத்திலிருந்து வரும் வாசனை யாருக்குதான் பிடிக்காது. ஒவ்வொரு கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும்போதும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் முதல் இரண்டு நாள்கள் புதிய பாடப்புத்தகம், நோட்டுகள் என அதன் வாசனையில்தான் முழுமையடையும். குறிப்பாக, பாடப் புத்தகத்திலிருக்கும் விதவிதமான வண்ணப் படங்களைக் கண்டு ஆச்சரியம் அடையும் குழந்தைகளின் முகபாவனைகள், சொல் கோர்க்க இயலாக்கவிதை.
இந்த கல்வியாண்டு அந்த கவிதைகளை மீட்டுருவாக்கம் செய்யுமா? அனைவருக்கும் புதிய புத்தகங்கள் கிடைக்குமா? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது கரோனா நெருக்கடி.
அச்சு தொழிலாளர்களின் நெருக்கடி
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடும் சமயத்தில், அச்சு தொழிலாளர்களுக்கு வேலை தொடங்கிவிடும். இவர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரைதான் அதிகமாக வேலை இருக்கும். அதன் பிறகான ஆறு மாதங்களில் புத்தக கடைக்காரர்களின் ஆர்டர்களில்தான் காலத்தை ஓட்டவேண்டும்.
தற்போது நோட்டுகள் தயாரிக்கத் தேவையான காகித அட்டை, லேமினேசன் பேப்பர், இங்க் போன்ற மூலப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், ஒரு நோட்டு புத்தகத்திற்கு கூலி நிர்ணயித்து தயாரித்து கொடுக்க வேண்டியுள்ளது. இது உற்பத்தியாளர், தொழிலாளர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். 96 பக்க நோட்டு புத்தகம், 192 பக்க நோட்டு, பாட புத்தகம் என அனைத்தும் அதிக விலையையும் பற்றாக்குறையையும் சந்திக்கலாம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 300க்கும் மேற்பட்ட பெரிய அச்சக நிறுவனங்களும், 500க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான அச்சகங்களும் செயல்பட்டுவருகின்றன. இத்தொழிலை நேரடியாக சுமார் 30 ஆயிரம் பேரும், மறைமுகமாக 80 ஆயிரம் பேரும் சார்ந்து வாழ்கின்றனர். வருடாந்திர காலண்டர், டைரி தயாரிக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், கோடைக்கால பணியில் கரோனா பெரும் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அச்சு தொழிலில் ஈடுபடும் டேனியல், “கரோனாவால் 50 நாள்கள் அச்சகத் தொழில் முடங்கியிருந்தது. இதனால், அச்சகத்திற்கு தேவையான மூலப் பொருட்கள், இயந்திரங்களுக்கு தேவையான ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் உற்பத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இவை வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து கிடைத்து வந்தன. தற்போது போக்குவரத்து முடங்கியதால், மூலப் பொருள்கள் வந்து சேருவதில் சிக்கல் உண்டாகியுள்ளது. தற்போது இருப்பதை வைத்து பணியை தொடங்கியுள்ளோம்.
இதனால், உரிய நேரத்தில் பாட புத்தகங்களை அச்சடித்து வழங்குவதில் தாமதம் ஏற்படும். குறிப்பாக, சீனா போன்ற வெளி நாடுகளிலிருந்து பெறப்படும் காகித மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இது நோட்டு புத்தகங்களின் விலையை 30 விழுக்காடு உயரச் செய்யலாம். நோட்டு புத்தகங்கள் விலையேற்றமாகாமலிருக்க மத்திய, மாநில அரசுகள் மூலப்பொருட்கள் விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: தென்னகத்திற்கே ஒளிக்கொடுக்கும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் அவலம்!