விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயில் மலைப் பகுதியில் உள்ள 35 கடைகள் ஏலம் விடப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோயில் நிர்வாகம் கடைகளை ஏலம் விடாமல் இருந்தன. இதனை அடுத்து சதுரகிரி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடைகளை ஏலம் விடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சதுரகிரி கோயில் மலைப் பகுதியில் உள்ள கடைகளை ஏலம் விட உத்தரவிட்டது.
இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஏலம் விடப்பட்டது. உணவு பொருட்கள் விற்பதற்கு தடை விதித்தும், மாதந்தோறும் அமாவாசை , பௌர்ணமி ஆகிய 2 நாட்கள் மட்டுமே கடை வைக்க அனுமதி எனவும் மற்ற நாட்களில் கடை வைத்தால் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கோயில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மொத்தமுள்ள 35 கடைகளில் 25 கடைகள் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 105 வயது மூதாட்டியை கொன்ற பேரன் கைது!