விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கட்டடப் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான ராக்காச்சி அம்மன் கோயில், அய்யனார் கோயில் பகுதி போன்ற ஆற்றுப் பகுதிகளில் மணல் திருட்டு நடைபெற்றுவருவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில், காவலர்கள் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செண்பகத்தோப்பு சாலைப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, நான்கு பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு டிராக்டர், இரண்டு மாட்டுவண்டி மணலுடன் பறிமுதல்செய்யப்பட்டன.
மணல் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'மணல் கடத்தினால் குண்டாஸ் பாயும்' - காவல்துறை எச்சரிக்கை