உலகை கரோனா வைரஸ் அச்சுறுத்தி ஏராளமானோர் உயிரிழந்துவருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பிலும் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி மதுபான கடைகள் அனைத்தும் மூடபட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி கிராமம் நூர்சாகிபுரம் மயானப் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நூர்சாகிபுரம் மயானத்தில் வைத்து மது விற்பனை செய்வது தெரியவந்தது. அலுவலர்களை பார்த்ததும் மது விற்பனை செய்தவர்கள் இருவர் தப்பிய நிலையில் அங்கிருந்த 42 மதுபாட்டில்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து மதுவிலக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மது விற்பனை செய்த நபர்கள் யார் என்று காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தன்னலம் பாராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள்