விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை செல்லும் பிரதான சாலையில் உள்ள தனியார் (எச்டிஎஃப்சி) வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் இன்று காலை மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் எரிந்து சாம்பலானதாகக் கருதப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று தெரிவித்த காவல் துறையினர், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தீப்பற்றி எரிந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 7 லட்சம் இருந்ததாகவும், சென்னையில் இருந்து வங்கி ஏடிஎம் இயந்திர தொழில் நுட்ப வல்லுநர்கள் வந்த பிறகே பணம் பாதுகாப்பாக உள்ளதா அல்லது எரிந்து போனதா என்பது தெரியவரும் என வங்கி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.