விருதுநகர்: ராஜபாளையம் தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் விவேகானந்தனை ஆதரித்து அக்கட்சியின் முதன்மைத் துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல; எங்கள் தாத்தா, அப்பா யாரும் கட்சி ஆரம்பித்து அதை எங்களுக்குக் கொடுக்கவில்லை. நாங்கள் கட்சி ஆரம்பித்தது மக்கள் நலனுக்காக...
இந்த முறை இரண்டு பிரதான கட்சிகளுக்கு மாற்றாக எங்களுக்கு வாக்களியுங்கள். நாங்கள் உங்களுக்கு எப்படிச் சேவை செய்கிறோம் என்பதை நீங்கள் பாருங்கள். எவ்வளவு நாளாக உங்கள் கண்களைக் கட்டிவிட்டு அவர்கள் செயல்படுவார்கள். ஜெயலலிதா இல்லாமல் அதிமுக ஆடிக்கொண்டிருக்கிறது.
தலைமை சரியில்லாமல் வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். ஏற்கனவே கடனில் திண்டாடிக் கொண்டிருக்கின்றது தமிழ்நாடு அரசு. திமுகவை சொல்ல வேண்டுமென்றால் ஓட்டை உடைசல் வீட்டை சரிசெய்து உங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம் எனக் கூறிவருகின்றனர். அதிமுக, திமுகவினர் இருவருமே பரம்பரைத் திருடர்கள்.
என்னை யாராவது திருடன் என்று சொன்னால் நான் சும்மா இருப்பேனா சண்டை போட்டிருப்பேன். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். காற்றில் திருடி ஊழலில் ஈடுபட்டவர்கள் திமுகவினர். காசு கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கும் கட்சியினருக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.