விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் தனியார் தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன. இந்நிலையில், சிவகாசி ஹயக்ரிவாஸ் சர்வதேச பள்ளியும், சிவகாசி ஜேசிஐ டைனமிக்கும் இணைந்து பள்ளிப் பேருந்தில் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள ஐந்து ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் பொருத்தியுள்ளனர். இவை, ஒரே நேரத்தில் பத்து நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்க வசதி செய்துள்ளது.
மேலும், காற்றோட்டத்திற்காக மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து கரோனா தொற்று முடியும் வரை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பள்ளி பேருந்தை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சியில் சிவகாசி சார்ஆட்சியர் தினேஷ்குமார், சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்காக இ-பதிவு விண்ணப்பிக்க தற்காலிகத் தடை!