விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதுரை பாண்டி என்பவரின் மகள் பாண்டிச் செல்வி (21). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முருகேசன் என்பவருடன் திருமணமானது.
இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த பாண்டிச்செல்வி சாத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாள்களாகச் சிகிச்சைப் பெற்றுவந்தார். இன்று (அக்.31) காலை அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, பாண்டிச்செல்விக்கு ரத்தப் போக்கு அதிகளவில் சென்றது. மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பெண் குழந்தை கோவில்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பாண்டிச்செல்விக்கு ஏற்பட்ட தொடர் ரத்தப் போக்கின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என பாண்டிச்செல்வியின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல் தொடர்ந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது இழப்புகள் ஏற்பட்டுவருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.