கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 22) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் வீட்டில் விநாயகர் சிலை உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஈஸ்வரன் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 52 விநாயகர் சிலைகள் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் விநாயகர் சிலைகளை பொது வெளியில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டில் வைத்து சிலைகளை வழிபாடு செய்யவேண்டும் எனவும் மீறினால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தனர்.
மேலும் வீட்டில் இருந்த விநாயகர் சிலை வெளியே எடுத்துச் செல்லாமல் இருக்க காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.