விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், அலெக்ஸாண்டர். இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தார். இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற அவர், சிறிது நேரம் தூங்கப் போவதாக தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் அலெக்ஸாண்டர் அறையின் கதவினைத் திறக்காததால், சந்தேகமடைந்த அவரது மனைவி, அருகிலுள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, அலெக்ஸாண்டர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து, திருத்தங்கல் காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் வீட்டிலிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில் அலெக்ஸாண்டர் கூறியிருந்ததாவது: ஜனவரி 31ஆம் தேதி காலை காவல் நிலைய அணிவகுப்பில் கலந்து கொள்ளாததால், என் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடல் நிலை சரியில்லாத என் தாயை பராமரித்து வருவதால், அணிவகுப்பில் கலந்து கொள்ள கால தாமதம் ஆகிவிட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுடன் இந்த கடிதத்தை எழுதியுள்ளேன், என்றிருந்துள்ளது.
இதுகுறித்து, உறவினர்கள் கூறும்போது, “இன்று காலை பணி முடிந்து வீட்டிற்கு வந்தவர், தூக்கிட்டுக் கொண்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அலுவலர்கள் நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தையைக் கொன்று புதைத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை