தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்ததோடு, உயிரிழப்புகளும் அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், சென்னையில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன. இதனால் கரோனா அச்சம் அதிகரித்து சென்னையில் பணிபுரியும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இ - பாஸ் பெற்று, வாகனங்களில் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
இதில், விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 33 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சென்னை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் நபர்களை, அழகாபுரி சோதனைச்சாவடியில் சோதனைக்கு உட்படுத்தி, தொடர்ந்து அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெண்கள் தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் என150க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் முடிவுகள் வராததால், அங்குள்ள மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் தங்கியுள்ள கல்லூரியில் கழிவறை சுகாதாரமற்றதாக இருப்பதாகவும், எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து வட்டாட்சியரிடம் புகார் அளித்தால் அவர்கள் ஒருமையில் பேசுவதாகவும், தங்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், நேற்று இரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அக்கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 35 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!