விருதுநகரில் அல்லம்பட்டி அருகேயுள்ள மாத்த நாயக்கன்பட்டி பகுதியில் விருதுநகர் நகராட்சி சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் ஒன்று ஒரு கொடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகளிலும் இயந்திரம் நிறுவப்பட்டது.
ஆனால், விருதுநகர் நகராட்சியில் நிறுவப்பட்ட இயந்திரம் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த இயந்திரம் தற்போது துருபிடித்தும் புதர் மண்டியும் காட்சியளிக்கிறது. இந்நிலையில், அவ்வியந்திரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச்சேர்ந்த காசிராஜன் என்பவர் தெரிவிக்கையில், "குப்பை மறுசுழற்சி இயந்திரத்தை முறையாகப் பயன்படுத்தினால் குப்பைகளை உரமாக மாற்றமுடியும். அந்த உரத்தை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கமுடியும்.
இதன் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதோடு மட்டுமல்லாமல், விருதுநகர் நகராட்சியை குப்பைகளற்ற நகராட்சியாக மாற்ற முடியும்" என்றார்.
இதையும் படிங்க: பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!